வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப் ஆனது, கூடுதலாக தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களிடம் சாட் செய்யும் வகையிலான "GUEST CHAT" என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, தற்போது வாட்ஸ்அப்பில் தங்களை இணைத்துக்கொள்ளாத பயனர்களுக்கு கூட சேவையை வழங்கும் முடிவை எடுத்துள்ளது.
'GUEST CHAT' என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களுடனும் இனி சாட் செய்யும் வசதியை பயனர்கள் பெருவார்கள்.
யாருடன் சாட் செய்ய விரும்புகிறோமோ அவர்களின் ஃபோன் எண்ணிற்கு SMS அல்லது GMAIL, சமூக வலைதள முகவரிக்கு இன்வைட் லிங்க் அனுப்பி அதன்மூலம் சாட் செய்யலாம். ஆனால் இந்த அம்சத்தில் ஃபோட்டோ, வீடியோக்களை அனுப்பவோ, வாய்ஸ், வீடியோ கால்களை மேற்கொள்ளவோ முடியாது.
'GUEST CHAT' என்ற அம்சத்தின் மூலம் லிங்கை அனுப்பி சாட் செய்வதின் மூலம், பயனர்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் அக்கவுண்ட் இல்லையென்றாலும் சாட் செய்யும் வசதியை பெறுகின்றனர்.
ஆனால் அதேநேரத்தில் கெட்ட எண்ணங்களுடன் இருக்கும் நபர்களை எளிதில் இழுத்துவரும் ஆபத்தையும் இந்த புதிய அம்சம் உருவாக்கும் என்றும், துன்புறுத்தல் அல்லது விரும்பத்தகாத குழு சேர்க்கைகள் போன்ற தேவையற்ற தொடர்புகளுக்கு வழிவகுக்கும் என நெட்டிசன்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இவை அனைத்திற்கும் தீர்வுகாணும் வகையில் மெட்டா செயலாற்றும் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்துவருகிறது.