டெக்

வாட்ஸ்அப்புடன் மெசஞ்சரை இணைக்க திட்டம்: தீவிரமாக வேலை செய்யும் ஃபேஸ்புக்!!

webteam

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்தச் செயலி, பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் மேலும் பல மாற்றங்களும், அப்டேட்களும் வாட்ஸ்அப்-ல் கொண்டு வரப்பட்டன. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இவை மூன்றையும் இணைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

அதாவது சாட்களை இணைப்பது. ஒரு பயனாளர் ஒரே நேரத்தில் மூன்றிலும் இணைந்திருக்கலாம். இன்ஸ்டாவில் இருந்து ஃபேஸ்புக்கில் இருப்பவருக்கு சார் செய்யலாம். வாட்ஸ் அப்பில் இருந்து மெசஞ்சரில் ஃபேஸ்புக் பயனாளருடன் சேட் செய்யலாம். அதேபோல் வாட்ஸ் அப்பில் ஒருவரை பிளாக் செய்தால் அவர் ஃபேஸ்புக் இன்ஸ்டா என அனைத்திலும் பிளாக் ஆகிவிடுவார். இது பயனாளர்களை எளிதாக இணைக்க உதவும் என ஃபேஸ்புக் தெரிவிக்கிறது.

அதாவது ஒருவர் வாட்ஸ்அப் மட்டும் வைத்துள்ளார். மற்றொருவர் ஃபேஸ்புக்கில் மட்டும் இருக்கிறார். அப்படி என்றாலும் இருவரும் சேட் செய்து இணைந்திருக்கும் வசதியை இது கொடுக்கிறது. அதன்படி முதலில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்கை இணைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் இன்ஸ்டா, ஃபேஸ்புக்கை இணைக்கவும் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பை இது எந்த அளவுக்கு உறுதி செய்யும், அதற்கு ஃபேஸ்புக் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்னவென்ற விவரங்களை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு குறைபாடு ஏதும் இன்றி, பயன்படுத்த எளிதாக இருந்தால் நிச்சயம் இந்த திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.