உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களை கவர அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்ஸ் என்ன என்பதை காணலாம்.
பூமராங் வீடியோ:
பூமராங் வீடியோ வசதியை விரைவில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது. பூமராங் வீடியோ வசதி தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ளது. இன்ஸ்டாவில் பலராலும் பயன்படுத்தப்படும் பூமராங் வீடியோ வாட்ஸ் அப்பிலும் பயனாளர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 7 நொடிகளுக்குள் அடங்கும் பூமராங் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பலாம் என்றும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் iOS பயனாளர்களுக்கு இந்த வசதி வரும் என்றும் அதற்கு பின்னர் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மெமோஜி:
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு மெமோஜியை அறிமுகம் செய்தது. அனிமோஜி வகையில் இருக்கும் மெமோஜிகளை ஆப்பிள் பயனாளர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிள் பயனாளர்கள் வாட்ஸ் அப்பிலும் மெமோஜியை பயன்படுத்த புதிய அப்டேட் வரவுள்ளது.
பணப் பரிவர்த்தனை:
வாட்ஸ் அப் விரைவில் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரவுள்ளது. தற்போது பீட்டா பயனாளர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ சோதனையில் உள்ளது. பேடிஎம், கூகுள் பே போல பணப் பரிவர்த்தனைக்கு ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’ செயல்படும்.
மல்ட்டி பிளாட்ஃபார்ம் சப்போர்ட்:
செல்போன், கம்யூட்டர், ஐ பேட் போன்ற பல சாதனங்களிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது செல்போன் மூலம் கணினியில் இணைத்து மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். iOS சாதனங்களில் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை அதே நேரத்தில் ஆண்ட்ராய்டிலும் பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
டார்க் மோட்:
வாட்ஸ் அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது. ட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனின் சில மாடல்களில் டார்க் மோடை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.