நவீன மின்னணு உலகில் பாஸ்வேர்டுகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதால், அதை கவனத்துடன் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்டது. பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக மிகச் சாதாரணமான வார்த்தைகளையோ அல்லது எண்களையோ பலரும் பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் மிகவும் எளிதில் யூகித்து ஊடுருவக் கூடிய மோசமான பாஸ்வேர்டுகள் எவை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்களே மோசமான பாஸ்வேர்டாக தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
ஸ்பிளாஷ் டேட்டா என்ற சர்வதேச பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 1,2,3,4,5,6 என்ற பாஸ்வேர்டை தொடர்ந்து, மோசமான பாஸ்வேர்டாக ‘பாஸ்வேர்டு’ என்ற சொல்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் டொனால்டு என்ற பெயரும் சேர்ந்துள்ளதாகவும், அது 23வது இடத்தில் உள்ளதாகவும் ஸ்பிளாஷ் டேட்டா தெரிவித்துள்ளது. இதுதவிர குவெர்ட்டி, பேஸ்பால் போன்ற பெயர்களும் மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்து இந்தப் பட்டிலை தயாரித்துள்ளதாக ஸ்பிளாஷ் டேட்டா கூறியுள்ளது. பொதுவாக பயன்படுத்தாத சொற்களுடன் பல்வேறு வகைப்பட்ட சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்ற ஆலோசனையையும் ஸ்பிளாஷ் டேட்டா தெரிவித்துள்ளது. இல்லையென்றால் உங்களின் கணக்குகள் ஊடுருவப்படலாம்.