டெக்

வாட்ஸ்அப்பில் தொந்தரவா? - புகார் அளிக்க புதிய வசதி

வாட்ஸ்அப்பில் தொந்தரவா? - புகார் அளிக்க புதிய வசதி

webteam

வாட்ஸ்அப்பில் விரும்பத்தகாத தகவல்கள் வரும்பட்சத்தில் அதுகுறித்து மத்‌திய தொலைத்தொடர்புத் துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என அத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்பில் வரும் விரும்பத்தகாத தகவலை ஸ்க்ரீன் ஷாட் ஆக படம்பிடித்து அதையும் மொபைல் எண்ணையும் ccadn-dot@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் எனத் தகவல்தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி தெரிவித்தார். விரும்பத்தகாத தகவல் என்பது மிரட்டலாகவோ நிர்பந்திப்பதாகவோ அல்லது ஆபாசமானதாகவோ இருக்கலாம் என்று‌ம் ஆஷிஷ் ஜோஷி தெரிவித்தார். 

பாதிக்கப்பட்டவர் தரும் புகார் சம்மந்த‌ப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் காவல் நிலையத்துக்கும் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார். வாடிக்கையாளருக்கு விரும்பத்தகாத தகவல்கள் வரும்பட்சத்தில் அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மொபைல் ஃபோன் நிறுவனங்களின் கடமை என்றும் ஏனெனில் வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்திலேயே இதுகுறித்த உறுதியை அவை வழங்கியுள்ளதாகவும் ஆஷிஷ் ஜோஷி தெரிவித்தார். 

மேலும், தொலைத்தொடர்பு சேவையில் வாடிக்கையாளர் விரும்பத்தகாத தகவல்களைப் பெறுவது உரிம விதிமுறைகளை மீறுவதாகும் என கடந்த 19ம் தேதி மத்திய தொலைத் தொடர்புத் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்ற பல்வேறு துறை பிரபலங்களுக்கு வாட்ஸ்அப்பில் விரும்பத்தகாத தகவல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில் தொலைத் தொடர்புத்துறை இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது