சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 2024ல் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், இவர்கள் சென்ற விண்கலத்தின் த்ரஸ்டர் செயலிழப்பு மற்றும் ஹீலியம் கசிவு போன்ற பழுது காரணமாக இருவரும் விண்வெளிநிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதில் சுனிதாவின் உடல் மெலிந்து இருந்த வீடியோக்களைப் பார்த்த மக்கள் சுனிதாவிற்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவர்கள் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பவேண்டும் என்றும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.
இதனை மறுத்த சுனிதா வில்லியம்ஸ், தான் நலமுடன் அதே எடையுடன் இருப்பதாகவும், விண்வெளி நிலையத்தில் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சியினால் உடல் மெலிந்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே, இவர்களை மீண்டும் பூமிக்கு திருப்பி கூட்டி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டு இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி மாதத்தில் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் இவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடமைகளை எடுத்துக்கொண்டு கடந்த வாரம் ரஷ்யாவின் சோயுஸ் 2.1b என்ற விண்கலத்தின் மூலம் MS29 என்ற சரக்கு விண்கலம் ஒன்று விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.
விண்வெளி நிலையத்திற்குள் இந்த சரக்கு விண்கலம் சென்றதும் அதில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசியதாகவும், மேலும் விண்வெளிநிலையத்தில் கசிவு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் வீரர்கள், விண்வெளிநிலையத்தை சுத்தம் செய்ய ஏர் ஸ்க்ரப்பிங் உதவியுடன் சுத்தம் செய்ததாகவும், காற்றின் தரம் மீண்டும் சுத்தமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவலைகள் எதுவும் இல்லை என்பதையும் கட்டுப்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆனாலும் அடுத்தடுத்து எழும் எழும் பிரச்சனைகளால் விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் நிலை கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர்.
இதில், சுனிதா வில்லியம்ஸ் தற்பொழுது விண்வெளி நிலையத்தின் தளபதியாக பணியாற்றுகிறார். அதே நேரத்தில் வில்மோர் விமானப் பொறியாளராக பணிபுரிந்து ஆராய்ச்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.