சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் pt web
டெக்

விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும்போது என்னவெல்லாம் சிக்கல்கள் வரும்? ஆய்வுகள் சொல்வதென்ன?

விண்வெளி நிலையத்தில் கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.

அங்கேஷ்வர்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எட்டு நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த அவர்களது பணி போயிங்கின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீட்டிக்கப்பட்டது. அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியாமல்போனது. இதனையடுத்து அவர்களை பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்த்தது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ரக ராக்கெட், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

4 வீரர்களையும் வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ்

ராக்கெட்டில் 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், 29 மணிநேர பயணத்திற்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த 4 வீரர்களையும் அங்கிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சக விண்வெளி வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 4 பேரும் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ள நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகிய இருவரும், செவ்வாய் கிழமை பூமிக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் புதன் கிழமை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாகவும் பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதி செய்வதற்காகவும் செவ்வாய் கிழமையே இருவரையும் அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது. சுனிதா மற்றும் வில்மோர் ஆகிய இருவருடன் நாசா விண்வெளி வீரர் நிக்ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

இதுதொடர்பாக 'விஞ்ஞான் பிரச்சார்' நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரனைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

விண்வெளி வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது, பூமியின் சூழலுக்கு தக்கவாறு தம்மை தக்கவைத்துக்கொள்ள எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.. எலக்ட்ரோலைட்டுகளை அதிகம் குடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்களே?

இருட்டான அறையில் இருந்துவிட்டு, பிரகாசமான அறைக்கு வந்துவிட்டால் கண்கள் கூசும். இதுமாதிரியான சிறு சிறு சிக்கல்கள்தான் அவர்களுக்கும். முதலில், அதிகமாக நடப்பது, ஓடிவது போன்ற செயல்பாடுகளைச் செய்யமாட்டார்கள். இதற்காக படுத்த படுக்கையாக இருப்பார்கள் என்ற அர்த்தம் கிடையாது. கைகால்கள் கொஞ்சம் தள்ளாடும். விண்வெளியில் பலநாட்கள் இருக்கிறோம் என்றால் நமது எலும்புகளின் அடர்த்தி குறையும். எனவே, கால்சியம் அதிகம் இருக்கும் பொருட்களை உட்கொள்வார்கள்.

புட்சு வில்மோர், சுனிதா வில்லியம்ஸ்

எலட்ரோலைட்டுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய காரணம் என்னவென்றால், அவர்கள் விண்வெளியில் இருந்து வரும்போது அதிகமான உஷ்னத்தில் வருவார்கள். இந்த வெப்பத்தின் காரணமாக உடலில் இருந்து தண்ணீர் சத்து வெளியேறியிருக்கும். அதற்காக எலக்ட்ரோலைட்டிகளை எடுத்துக்கொள்வார்கள். ஒருமாதம் வரை மட்டும் மெதுவாக வேலைகளைச் செய்ய வேண்டும்.. மற்றபடி எப்போதும்போல் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், இயல்பாக இருக்கலாம்.

இதற்கு முன் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பியவர்கள் எம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொண்டனர். உதாரணத்திற்கு பிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறாரே?

பிராங்க் ரூபியோவை வைத்து ஒரு ஆய்வையே நடத்தினார்கள். விண்வெளியில் இருக்கும்போது எம்மாதிரியான உடல்நிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுதான் அவர்களது பிரதான ஆய்வுப்பணியே. உடலில் பல்வேறு விதமான சென்சார்களை வைத்துக்கொண்டுதான் ஆய்வையே செய்வார். ஆய்வின் முடிவுகள் இன்னும் முழு அளவில் வெளியே வரவில்லை. தற்போதுவரை பரிசோதனை செய்துகொண்டுள்ளார்கள். ஆனால், வெளிவந்த தகவல்களை வைத்து சில விஷயங்களை நம்மால் சொல்ல முடியும்.

உதாரணமாக, தசையின் சத்துகள் குறையும், எலும்பின் அடர்த்தி குறையும், குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சதவீதங்கள் மாறுபடலாம். ஏனெனில் அங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வோம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியா போன்ற விஷயங்கள் இருக்காது. அது குடல்களில் சில மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதற்கான மாற்று நடவடிக்கைகளையும் ஆய்வாளர் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இதற்கு முன்பு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களின் அனுபவங்களை எல்லாம் வைத்துக்கொண்டு, பல்வேறு விதமான விண்வெளி உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். இதன்மூலம் செயற்கையாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வேலை கொடுப்பதை உறுதி செய்து, அதன் வழியே எலும்புத் தேய்மானத்தை குறைக்கின்றனர். விண்வெளி வீரர்கள் இரண்டரை மணி நேரம் விண்வெளி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பூமிக்குத் திரும்பும் போது வானிலை எப்படி இருக்க வேண்டியது அவசியம்?

பூமிக்குத் திரும்பும்போது, அதாவது அவர்கள் தரையிறங்கக்கூடிய இடத்தில் புயல், மின்னல் போன்ற ஏற்படக்கூடாது. அப்படி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால், தரையிறங்கும் நேரத்தைத் தள்ளிவைப்பார்கள்.