டெக்

“விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு” - இஸ்ரோ

“விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு” - இஸ்ரோ

webteam

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயன்றது. 

மேலும், நிலவின் தென் துருவம் அருகே வந்த நாசாவின் ஆர்பிட்டர் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது. அதன் முயற்சியும் பலன் அளிக்காததால் இறுதியாக நாசாவின் 60 மீட்டர் பெரிய ஆன்டெனா உதவியுடன் சிக்னல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கும் விக்ரம் லேண்டரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 

இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே நிலவில் பகல் பொழுது இருக்கும் என்பதால், லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணிகள் நடைபெறும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.