ஐபோன் 15
ஐபோன் 15  முகநூல்
டெக்

”சார்ஜர் தீப்பிடித்து என் கை சுட்டுவிட்டது” - ஐபோன் சார்ஜர் பாதுகாப்பு? - வைரலாகும் வீடியோ!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதே பலரது ஆசைகளில் ஒன்றாக இருக்கும். அதுவும் ஆப்பிள் ஐபோன்கள் என்றாலே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. காலத்திற்கு ஏற்றார் போல அப்டேட்களையும், ஐபோன் சிரீஸ்களையும் அள்ளி தெளிக்கும் ஆப்பிள் நிறுவனத்தில், செல்போன்களை மக்கள் வாங்குவதற்கு காரணம், அதன் வசீகர தோற்றம் மட்டும் கிடையாது, அதன் நம்பகத்தன்மையும், உயர்தரமும் கூட.

ஆனால் தற்போது இதற்கு கேள்வி எழுப்பும் வகையில், சம்பவம் ஒன்று அரங்கேறி, சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம்வர துவங்கியுள்ளது.

ஜாஸ்மின் அலுவாலியா என்ற பெண் ஒருவர், தன் ஐபோன் 15 ஐ சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்தபோது, சார்ஜர் தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தனது கை சுட்டுவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் எனது போனை சார்ஜ் செய்து பயன்படுத்தி கொண்டிருந்தேன். அப்போது திடீரென சார்ஜர் எரிய தொடங்கியது. அப்போதுதான் எனக்கு புரிந்தது அந்த சார்ஜரில் சேதம் ஏற்பட்டுள்ளதென்று.

ஆகவே, தயவு செய்து இரவில் தூங்கும்போது உங்கள் போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்க வேண்டாம். இது மிகப்பெரிய ஆபத்தினை உருவாக்கும். மேலும், ஆப்பிள் தனது புதிய போன்களை விற்பனை செய்வதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை தரச்சோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ ஐபோன் பயனர்களிடையே சற்று பீதியை கிளப்பியுள்ள நிலையில் பாதுகாப்பு தொடர்பான கேள்வியையும் எழுப்பியுள்ளது.