டெக்

புதிய சர்ச்சையில் சிக்கிய டிக்டாக்: ரூ.40 கோடி அபராதம்!

webteam

அனுமதியில்லாமல் சிறுவர்களின் தகவல்களை திரட்டியதாக டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.

ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி, அதற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்திலும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் டிக்டாக் செயலி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ரகசியத் தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக் டாக் செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

அதாவது 13 வயதுகுட்பட்ட சிறுவர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விவரத்தை சேகரிக்கும் போது அவரவர்களின் பெற்றோர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். ஆனால் அந்த விதியை டிக் டாக் கடைபிடிக்கவில்லை என்றும் விதியை மீறி குழந்தைகளின் தகவல்களை திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக  ஆணையம், டிக் டாக் செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிக் டாக், 13 வயதுக்குட்பட்டவர்களுக்காக பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.