Deepak Kumar Uprariya, HCE
Deepak Kumar Uprariya, HCE Twitter
டெக்

“18 மாசமா சம்பளம் இல்ல; டீ கடை வச்சு வாழறேன்” - சந்திரயானுக்கு ஏவுகளம் அமைத்த அரசு ஊழியர்!

Angeshwar G

விண்வெளித்துறையில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்த நிலையில், ஆதித்யா எல்.1 திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்ததாக சமுத்ரயான் திட்டத்தையும் தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Chandrayaan-3 - ISRO

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (HEC) நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் இருந்துள்ளது. இவர்கள்தான் விண்கலத்துக்கு ஏவுகளம் அமைத்தவர்கள். சம்பளம் கிடைக்காததால், ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்திய அரசு நிறுவனமான HEC விண்வெளித் திட்டங்களுக்காக ஏவுதளத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மற்ற தொழில்களுக்கு தேவையான கனரக இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஊழியர்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளதென்றால், இங்குள்ள ஒரு ஊழியர் இட்லி கடை வைத்து தன் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார்.

HEC ஊழியரான தீபக் குமார் என்பவர் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றத்திற்கு எதிரே சாலையோர கடை ஒன்றை வைத்துள்ளார். காலையில் இட்லி, டீ போன்றவற்றை விற்றுவிட்டு அலுவலகம் செல்லும் அவர் மாலையும் அதேபோல் இட்லி, டீ விற்றுவிட்டு வீட்டிற்கு செல்கிறார்.

தீபக் குமார் உபாராரியா

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக் குமார் உபாராரியா, 2012 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் இருந்து விலகி HEC நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் 25 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த நிலையில் HEC நிறுவனத்தில் 8 ஆயிரம் ரூபாய்க்கு பணியில் அமர்ந்தார். அரசு நிறுவனம் என நம்பி வேலைக்கு சேர்ந்த அவருக்கு நடைமுறை நிகழ்வுகளோ வேறு மாதிரியான அனுபவங்களைக் கொடுத்துள்ளன என அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பிபிசி மராதி செய்தி நிறுவனத்திடம் அவர் கொடுத்த பேட்டியில், “கடன் தொகை அதிகமாகி திருப்பிக் கொடுக்க முடியாத சூழலுக்கு ஆளாகிவிட்டேன். கடன் கொடுத்தவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து வீட்டை நடத்தினேன். இங்கு இட்லி விற்பதால், நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். லாபமாக 50 முதல் 100 ரூபாய் கிடைக்கும். அதைக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறோம்.

எனக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் அவர்களுக்கு என்னால் பள்ளிக்கட்டணம்கூட செலுத்த முடியவில்லை. என் மகள்கள் அழுதுகொண்டே எப்போதும் வீட்டிற்கு வருகிறார்கள்” என்றுள்ளார் வேதனையுடன்.

பிபிசி மராதி கள நிலவரம் குறித்து வெளியிட்ட செய்தியில் HEC நிறுவனத்தில் பணிபுரியும் வேறு சிலரும் வேறு வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது. HEC என்பது நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அரசு நிறுவனம். தொடர்ச்சியான நஷ்டங்களால் அந்நிறுவனம் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க HEC நிறுவனத்திற்கு ரூ.153 கோடி தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிறுவனம் குறித்து கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள், “இந்நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிசு செய்துள்ளது. இந்நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர். அங்கு பணி புரியும் உயரதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இயந்திரங்கள் மாற்றப்படவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் தயாரிப்பை தொடங்கினால் நிறுவனம் லாபகரமாக செயல்படும்” என்றுள்ளனர்.