mark zuckerberg - Ashwini Vaishnaw web
டெக்

“நாங்க தோற்கல.. நீங்கள் சொன்னது தவறானது” - மார்க் ஜூக்கர்பெர்க் பேச்சுக்கு மத்திய அமைச்சர் பதில்!

மார்க் ஜூக்கபெர்க் சொன்ன கருத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதில் கொடுத்துள்ளார்.

PT WEB

ஃபேஸ்புக்கின் தாய் அமைப்பான மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பிரபல பாட் காஸ்டர் ஜோ ரோகனின் உடனான சமீபத்திய போட்காஸ்டில் பேசும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அதில், “2024 தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றன.

mark

ஆனால், கோவிட் தொற்று-க்கு பிறகான சூழலை சமாளிக்க முடியாத காரணத்தால் மக்களிடம் இருந்த எதிர்ப்பால் எல்லா ஆளும் தரப்பினரும் தோல்வியை சந்தித்தனர். கோவிட் பிறகான சூழலை சமாளிப்பதில் அப்படியொரு சிக்கல் இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மார்க் கருத்திற்கு மத்திய அமைச்சர் பதில்..

இந்நிலையில், மார்க் ஜூக்கர் பெர்க்கின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதில் கொடுத்துள்ளார். அதாவது, ஜூக்கர்பெர்க் சொன்னது தகவல் ரீதியாக தவறானது என்றும் இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்தனர். பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ மீதான தங்களது நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.