டெக்

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவு டெலிவரி செய்த உபர் ஈட்ஸ்

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போனில் உள்ள உணவு டெலிவரி செய்யும் அப்ளிகேஷன்களில் உணவு ஆர்டர் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களில் ‘ஆவி’ பறக்க அது டெலிவரி செய்யப்படும் என்பதை அனைவரும் அறிவோம்.

சொமேட்டோ, ஸ்விகி, உபர் ஈட்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் பணியை கவனித்து வருகின்றன. பூமிப்பந்தின் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அப்ளிகேஷன்களின் துணையோடு உணவை ஆர்டர் செய்து பெறலாம். 

இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது ‘உபர் ஈட்ஸ்’ நிறுவனம். இது உபர் ஈட்ஸ் நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ள முதல் அடிதான். இதற்கு காரணம் ஜப்பான் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான Yusaku Maezawa. அவர் விண்வெளிக்கு சுற்றுலா நிமித்தமாக Soyuz MS-20 என்ற விண்கலத்தில் பயணித்துள்ளார். அவர்தான் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.10 மணி அளவில் இந்த உணவு அங்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற Yusaku Maezawa,  தன்னுடன் உபர் ஈட்ஸ் உணவை எடுத்துச் சென்று, விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளரிடம் கொடுத்துள்ளார். 

விண்வெளிக்கு அவர் கொண்டு சென்ற உணவு என்ன?

உபர் ஈட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாட்டிறைச்சி, சிக்கன், பன்றி இறைச்சி மற்றும் கானாங்கெளுத்தி மீனை கொண்டு சமைத்த உணவு விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.