பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் கடந்த சில மணிநேரங்களாக முடங்கியுள்ளது.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி ஜாக் டோர்சே, நோவா க்ளாஸ், பிஸ் ஸ்டோன், ஈவன் வில்லியம்ஸ் ஆகியோர் ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தை துவங்கினர். கடந்த 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள ட்விட்டரை, தற்போது உலகம் முழுவதும் 330 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
உலகில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பெரும்பாலானோர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். பல அரசியல் தலைவர்கள் தாங்கள் கூற விரும்பும் கருத்துக்களை ட்விட்டர் மூலமே கூறுகின்றனர். எந்த ஒரு சம்பவமும் ட்விட்டரில் பரவி வேகமாக உலகம் முழுவதும் சென்றடையும். இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்விட்டர் முடங்கியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் ட்விட்டரை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளனர். இருப்பினும் செல்போன்களில் ட்விட்டர் அவ்வப்போது இயங்குகின்றது.