டெக்

டிக் டாக் பதிவிறக்கம் வசதியை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்!

webteam

டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.

‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

இதை எதிர்த்து டிக் டாக் நிறுவனம், தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீ‌திமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் டிக்டாக் செயலியை த‌த்தமது பிளே ஸ்டோர் மற்றும்‌ ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் ‌எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.

முன்னதாக விளக்கம் அளித்த டிக் டாக், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் இச்செயலியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் அரசின் விதிகளை பின்பற்றும் வகையில் தேவையா‌ன மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது. ஆனாலும் நீதிமன்றத்தின் தடை உத்தரவால் தற்போது டிக் டாக் செயலியின் பதிவிறக்கம் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.