விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விண்வெளி ஆய்வில் இந்திய இஸ்ரோ பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதன் அடுத்த நடவடிக்கையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு நிறைய பொதுவான தொழில்நுட்பங்கள் தேவை எனவும் அதற்கான வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ‘ககன்யான்’ என்ற இந்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதன்மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா அடையவுள்ளது. 3 விண்வெளி வீரர்கள் 7 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வார்கள். மாதிரி திட்டம் 40 மாதங்களில் தயார் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக 10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.