ChatGPT
ChatGPT  File Image
டெக்

ஆய்வுகாக நடத்தப்பட்ட கணக்கியல் தேர்வு.. மாணவர்களின் நேரடி கற்றலிடம் தோல்வியடைந்த ChatGPT!

Justindurai S

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டு வரும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் 2022 நவம்பர் மாதம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய திருப்புமுனையாக கருதப்படும் சாட் ஜிபிடி உலகம் முழுவதும் இணையதள வாசிகளை கவர்ந்துள்ளது.

சக மனிதரை போல உரையாடுவது, எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கோடிங் செய்வது, கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது, கவிதை எழுதுவது என சர்வ வேலைகளையும் சாட் ஜிபிடி உடனடியாக செய்து முடிக்கிறது என்பது நாம் அறிந்ததுதான். இந்நிலையில், கல்விக்கும் சாட் ஜிபிடி கைகொடுக்கும் என தெரியவந்துள்ளதால் மாணவர்கள் இதை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான கணக்கியல் தேர்வை சாட்ஜிபிடி எவ்வாறு அணுகும் என்று அமெரிக்காவில் உள்ள பிரிகாம் யங் யுனிவர்சிட்டி உள்ளிட்ட 186 பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர்.

இதில் மாணவர்கள் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டு, ஒருபிரிவு மாணவர்கள் தாங்கள் கற்றதை வைத்து கணக்கியல் தேர்வை எழுதினர். மற்றொரு தரப்பு மாணவர்கள் சாட் ஜிபிடியிடம் உதவி கேட்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவில் சாட் ஜிபிடியிடம் உதவி கேட்டு தேர்வெழுதிய மாணவர்கள் 47.4% மதிப்பெண் மட்டுமே பெற்றனர். அதேசமயத்தில் சுயமாக தேர்வெழுதிய மாணவர்கள் 76.7% மதிப்பெண்களைப் பெற்றனர். இருந்தபோதிலும், சாட் ஜிபிடியின் செயல்திறன் சுவாரஸ்யமாக இருப்பதாக மாணவர்கள் கூறினர்.

அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இந்த சாட் ஜிபிடி மிகவும் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கணக்கியல் தேர்வுகளில் சற்று பின்னடைவை கண்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.