டெக்

அதிக வசதிகள் வேண்டுமா? சந்தா செலுத்துக! டெலிகிராமில் அறிமுகமாகிறது ப்ரீமியம் ப்ளான்!

ச. முத்துகிருஷ்ணன்

டெலிகிராம் செயலியில் பிரீமியம் பிளானை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் கூறியுள்ளார்.

டெலிகிராம் செயலியில் தற்போது அனைத்து வசதிகளும் பயனர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சில மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ப்ரீமியம் பிளான் என்ற புதிய சந்தா செலுத்தும் திட்டத்தை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்தார்.

“டெலிகிராம் விளம்பரதாரர்களிடம் இருந்து நிதியை பெறுவது இல்லை. முதன்மையாக அதன் பயனர்களால் நிதியளிக்கப்படுகிறது. ஜூன் முதல், பயனர்கள் சில அம்சங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், டெலிகிராம் ஏற்கனவே உள்ள அம்சங்களுக்கு கட்டணம் வசூலிக்காது. புதிய அம்சங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும்.” என்று துரோவ் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில், டெலிகிராமிற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. அச்செயலியை பயன்படுத்துபவர்களில் 22% பேர் இந்தியாவில் வசிப்பவர்களே! டெலிகிராம் 2013 இல் அறிமுகமான போதிலும் வாட்ஸ்அப்பின் குழப்பமான தனியுரிமை கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்த பிறகுதான் டெலிகிராம் ஒரு அதிவேக வளர்ச்சியைக் கண்டது. வாட்ஸ்அப்பின் புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் பற்றித் தெரியாமல் இருந்த பல பயனர்கள், தனியுரிமையின் மீது படையெடுப்பதற்குப் பயந்து டெலிகிராமைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.