டெக்

மறைமலைநகர்: ஃபோர்டு கார் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் டாடா?

webteam

சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள போர்டு கார் தயாரிக்கும் நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே இன்று காலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் டாடா நிறுவன தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் தங்களது சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக ஃபோர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதையடுத்து அங்கு உள்ள பணியாளர்கள் தங்களுக்கு பணப்பலன் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் போர்டு நிறுவனம், வேறு ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் நலன் காக்கப்படும், தமிழகத்திற்கான வரி வருவாயும் கிடைக்கும்.

இந்த நிலையில் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஃபோர்டு நிறுவனம், டாடா நிறுவனத்திடம் நிலம் மற்றும் அங்கு கார் தயாரிக்கும் தொழிற்சாலை என அனைத்தையும் விற்க ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் சில மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளிலும் உதவி வருவதாக தெரிகிறது. இந்த அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், சென்னையை அடுத்த சிறுசேரியில் டாடா நிறுவனத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்தும் இந்த சந்திப்பின் போது விரிவாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.