ஆராய்ச்சி பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பட்ச் வில்மோர் என்பவருடன், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறந்த சுனிதா, விண்வெளி நிலையத்தை அடைந்து ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
பூமிக்குத் திரும்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அது நடைபெறாமல் போனது. இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்க்க, அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன்-9 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட 4 வீரர்களும், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய, அவர்களை மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் சுனிதா.
பூமிக்குத் திரும்புவதற்கான ஆயத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், சுனிதா வில்லியம்சுடன், பட்ச் வில்மோர், அமெரிக்க வீரர் நிக் ஹாக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலம், விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது.
இந்த 9 மாத பயணத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் உணவு உற்பத்தி செய்ய லெட்யுஸ் கீரைச் செடி வளர்ப்பு குறித்த ஆய்வு, விண்வெளி நிலைய காற்றில் கலக்கும் நீரை பிரித்து எடுக்கும் புதிய கருவி பற்றிய பரிசோதனை என்று அவரது பணிகள் தொடர்ந்தன.
டிராகன் விண்கலம் மூலம் புதன்கிழமை அதிகாலை வேளையில் ஃபுளோரிடாவில் சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்களும் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்வை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
விஞ்ஞானிகளின் விளக்கங்களுடன் முழு வீடியோ