டெக்

புதன், வெள்ளி, பூமியை சூரியன் விழுங்கும்! எப்போது? - ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ச. முத்துகிருஷ்ணன்

சூரியன் முழுவதும் எரிந்து தனது சக்தியை இழக்கும்போது புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கோள்களை அது விழுங்கிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் உயிர்களின் ஆதாரம் சூரியன். இது பூமியில் பல்வேறு உயிரினங்கள் செழித்து வளர அவசியமான ஒளி மற்றும் வெப்பத்தை வழங்குகிறது. ஆனால் இந்த சூரியன் தனது அனைத்து எரிபொருளையும் எரித்து முடித்த பின் என்னவாக மாறும்? என்று விஞ்ஞானிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தன்னில் இருக்கும் அனைத்து எரிபொருளையும் எரித்து முடிக்க சூரியனுக்கு 500 கோடி ஆண்டுகள் ஆகும். பின்னர் தன் ஒளி கொடுக்கும் சக்தியை முழுமையாக இழந்து சூரியன் “சிவப்பு ராட்சதமாக” மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன் ஹைட்ரஜனை இழக்கும் போது, அதன் எல்லை நூற்றுக்கணக்கான மடங்கு விரிவடையும். இதையடுத்து நமது பூமி தனது அழிவைச் சந்திக்கும் என்றும் புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கோள்களை சூரியன் தனக்குள் விழுங்கிவிடும் என்றும் அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை அதிர்ச்சி தரத்தக்க ஒன்றாக பார்க்கத் தேவையில்லை என்றும் ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை சுழற்சியில், தன்னை சுற்றி வரும் “கிரகங்களை மூழ்கடிக்கும்” அதாவது விழுங்கும் செயல்முறை பொதுவானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.