அரசின் இரண்டு நாள் தொலைத் தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று முடிவடைந்தது, இதில் 77,814.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகள் வாங்கப்பட்டது. ஜியோ இதில் 57,122 கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தார்.
தொலை தொடர்புத்துறை நடத்திய இந்த ஏலத்தில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய மூன்று ஏலதாரர்கள் பங்கேற்றனர், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 57,122.65 கோடி மதிப்புள்ள 488.35 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் பெற்று முதன்மையான வாங்குபவராக இருந்தார். ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 18,698.75 கோடி மதிப்புள்ள 355.45 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளையும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1,993.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.80 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும் வாங்கியது என்று அமைச்சகம் தெரிவித்தது.
தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அன்ஷு பிரகாஷ் இன்று மதியம் 12.45 மணிக்கு 6 சுற்று ஏலத்துடன் நிறைவடைந்ததாக அறிவித்தார், மேலும் ஏலங்களின் விற்பனை "எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது" என்றும் கூறினார். மொத்தம், 77,814 கோடி ரூபாய் மதிப்புள்ள 855.60 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஏலத்தின் மூலம், இந்த நிதியாண்டில் சுமார் 19,000 கோடி முதல் 20,000 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியது. மேலும் இந்த நிதியாண்டில் ₹15,000 கோடிக்கு மேல் முன்பணம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் 10,000 கோடி முதல் 11,000 கோடி ரூபாய் இருப்பு இருக்கும் என்று அது கூறியுள்ளது. விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மீது விதிக்கப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் 3% ஆக இருக்கும்.