SpaceX Makes History by Catching Starship with Giant Mechanical Arms X
டெக்

வரலாற்றில் முதல்முறை.. விண்கலத்தையே பிடித்துக் காட்டிய SpaceX! Elon Musk நிறுவனம் சாதனை!

ராக்கெட் மட்டும் அல்ல… விண்கலத்தையே பிடித்துக் காட்டிய ஸ்பேஸ்எக்ஸ்! இது எப்படி சாத்தியமானது? உலகையே வியக்க வைத்த எலான் மஸ்க்கின் அடுத்த சாதனை!

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

விண்வெளிப் பயணங்களை இன்னும் எளிமையாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்ளும் முயற்சியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகளை மீண்டும் பூமிக்குக் கொண்டுவந்து பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க்கின் நிறுவனம், தற்போது ஸ்டார்ஷிப் விண்கலத்தையே இயந்திரக் கரங்களால் வெற்றிகரமாகப் பிடித்து அசத்தியுள்ளது. 

முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மேலும், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் இலக்கை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நெருங்கியுள்ளது.

பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்த ஸ்டார்ஷிப், கடுமையான வெப்பத்தைத் தாங்கி ஸ்டார்பேஸ் ஏவுதளத்தை வந்தடைந்தது. அங்கு 'சாப்ஸ்டிக்' (Chopstick) எனப்படும் இரு பிரம்மாண்ட இயந்திரக் கரங்களுக்கு இடையில் அந்த விண்கலம் லாவகமாகப் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளிப் பயணச் செலவைக் குறைத்து, அடிக்கடி ராக்கெட்டுகளை ஏவும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பின் 15-வது சோதனைப் பயணமாகும். தனது 22 மணி நேரப் பயணத்தில் பூமியை 14 முறை சுற்றி வந்த ஸ்டார்ஷிப், ஸ்டார்லிங்க் இணையக் கட்டமைப்பிற்காக 26 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது.

இந்தச் சாதனைக்காக ஸ்பேஸ்எக்ஸ் குழுவினரைப் பாராட்டிய எலான் மஸ்க், விண்கலம் இயந்திரக் கரங்களுக்கு இடையே தொங்கியபடி இருக்கும் வீடியோவையும் பகிர்ந்தார். விண்வெளி நிபுணர்களும் இதை மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

SpaceX Catches Starship Rocket in Historic Achievement

இதுவரை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பூமிக்குத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்டுகளை மூன்று முறை வெற்றிகரமாகப் பிடித்துள்ளது. ஆனால், ஸ்டார்ஷிப் விண்கலத்தைப் பிடிப்பது மிகவும் சிக்கலான தொழில்நுட்பச் செயல்முறையாகும். ஏனெனில், பூஸ்டர் ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, விண்கலம் அதிக உயரத்திலிருந்து மிக அதிக வேகத்தில் கீழே இறங்கும். அத்தகைய சூழலில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஏற்படும் கடுமையான வெப்பத்தைத் தாங்கி, ஸ்டார்ஷிப் விண்கலம் 'சாப்ஸ்டிக்' இயந்திரக் கரங்களால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது.

இருப்பினும், நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சவால்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இன்னும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற வெற்றிகரமான சோதனைகளைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்வதே அந்நிறுவனத்தின் அடுத்தகட்ட இலக்காக உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸின் இந்த முயற்சியின் மூலம் விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் கணிசமாகக் குறைப்பதுடன், அடிக்கடி ராக்கெட்டுகளை ஏவும் வாய்ப்பும் உருவாகும். இந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தால், மனிதர்களின் விண்வெளிப் பயணக் கனவுகளும் புதிய உயரத்தை எட்டக்கூடும்.