டெக்

இணையம் முடங்கப்போகிறதா? இல்லையா? - உண்மை இதுதான்..!

இணையம் முடங்கப்போகிறதா? இல்லையா? - உண்மை இதுதான்..!

webteam

அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையம் முடங்க இருப்பதாகவும் இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இண்டெர்நெட் இல்லாமல் அனைவரும் சுற்றித்திரிய போகிறோம் என்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்து வருகின்றன. உலகம் முழுவதும் எப்படி இணையம் முடங்கும் இதுவெல்லாம் பொய் என்கிறது ஒரு குரூப். அட ஆமாப்ப்பா என செய்திகளின் லிங்கை ஆதாரமாக போடுகிறது ஒரு குரூப். எது தான் உண்மை? இணையம் முடங்கப்போகிறதா? இல்லையா?

செய்தி உண்மை தான். ஆனால் பரவும் கதை எல்லாம் உண்மை இல்லை. அதாவது கலிபோர்னி‌யாவைத் தலைமையிடமாக‌ கொண்டு செயல்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு தான் தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஆஃப் நேம்ஸ் அண்ட் நம்பர். இதனை சுருக்கமாக ICANN என்று குறிப்பிடுவார்கள். நாம் பயன்படுத்தும் இணைய பக்கங்கள், பரிமாற்றங்கள் அனைத்தும் அது தொடர்பான ஒரு குறிப்பிட்ட டொமைனில் தான் சேமிக்கப்படுகிறது. நமது தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்க உதவுவது கிரிப்டோகிராபிக் கீ (cryptographic key). இந்த கிரிப்டோகிராபிக் கீயை ஹேக் செய்வது மூலமே இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுகின்றன.

இதை தடுக்க DNS எனப்படும் ‘டொமைன் நேம் சிஸ்டம்’ நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே இணையத்திருட்டை தடுக்கவும், இணையத்தை மேலும் பாதுக்காப்பாக மாற்றவும் இந்த கிரிப்டோகிராபிக் கீயை மேலும் பலப்படுத்த வேண்டும் என்கிறது ICANN. அது தொடர்பான பராமரிப்பு வேலைகளில் தான் தற்போது இறங்க உள்ளது.

இதனையடுத்து இந்த பராமரிப்பு வேலைகள் முழுமையாக முடிய 48 மணி நேரங்கள் ஆகலாம் என்றும், பராமரிப்பு நடைபெறுவதால் இணையத்தின் வேகம் குறைய மட்டுமே வாய்ப்புள்ளதாகவும், முழுவதும் முடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்‌யாவில் குறிப்பிட்ட சில‌ சர்வர்களில்‌ பாதிப்பு‌ ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்‌ட சில ‌வ‌லைதளங்கள் மட்டுமே செயல்படாது என்றும், பண பரிமாற்றங்கள் உள்ளிட்ட சில சேவைகள்‌‌‌ ‌‌‌பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ‌ ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆக இணையவாசிகளுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், இணையம் முழுவதெல்லாம் முடங்கிப்போகாது. வழக்கம் போல் நீங்கள் சமூகவலைதளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கலாம். ஆனால், கொஞ்சம் மெதுவாக..