OnePlus
OnePlus  OnePlus Community
ஸ்மார்ட்ஃபோன்

GREEN LINE பிரச்னையா... OnePlus பயனாளர்களே இனி கவலை வேண்டாம்..!

karthi Kg

கடந்த சில மாதங்களாகவே இந்த பச்சைக் கோடு பிரச்னை , ஒன் பிளஸ் பயனாளர்களை படாத பாடு படுத்துகிறது. 'மந்திரத்த தூவினேன் ஜான் குள்ளமாகிட்டான்' என்பது போல, சாப்ட்வேர் அப்டேட் செய்தேன் வேறெதுவும் செய்யவில்லை என சத்தியம் அடித்துச் சொல்கிறார்கள் ஸ்மார்ட்போன் பயனாளர்கள். 'சம்சாரம் அது மின்சாரம்' பட பாணியில் 'கோதாவரி கோட்டக் கிழிடி' கதையாக மொபைலுக்கு நடுவே சச்சின் ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்தது போல ஒரு கோடு விழுந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கோ இரண்டு கோடுகள் விழுந்திருக்கின்றன. சிகப்பு, பச்சை என எல்லா நிறங்களிலும் கோடுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. AMOLED ஸ்கீரின்களில் இந்த பிரச்னை அதிகளவில் வருகிறது என சொல்லப்பட்டாலும், ஒன்பிளஸ் நிறுவன மாடல்களே இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டன. '40000 வாங்கறப்ப இதெல்லாம் வரும்னு சொன்னீங்களா' என்கிற ஆதங்கத்தில் ஒன்பிளஸ் சர்வீஸ் சென்டர் நோக்கி படையெடுத்து வருகிறார் ஒன்பிளஸ் விசுவாசிகள். ஒரு காலத்தில் NEVER SETTLE என கெத்தாக மாஸ் காட்டிய ஒன்பிளஸுக்கா இந்த நிலைமை என நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு நக்கல் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

OnepLus


அங்கீகரிக்கப்பட்ட ஒன் பிளஸ் சர்வீஸ் சென்டர்களில், இந்த பிரச்னையை நேக்காக டீல் செய்கிறது ஒன் பிளஸ். சிலருக்கும் சரி செய்து கொடுக்கிறார்கள். சிலருக்கோ ஏதாவது சால்ஜாப்பு சொல்லி 'முடியாது முடியாது' என டாட்டா காட்டிவிடுகிறார்கள்> இந்த நிலையில் தான் வேறுவழியின்றி இப்படியானதொரு முடிவுக்கு ஒன்பிளஸ் நிறுவனம் தள்ளப்பட்டிருக்கிறது.


என்ன முடிவு..?

இதன்படி, இனி ஒன் பிளஸ் மொபைல்களில், GREEN LINE பிரச்னை தென்பட்டால் அதற்கு LIFETIME REPLACEMENT WARRANTY தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது இனி உங்கள் ஒன்பிளஸ் மொபைலில் எப்போது பச்சைக் கோடு வந்தாலும், அதை ஒன்பிளஸ் நிறுவனம் மாற்றிக்கொடுத்துவிடும். இந்தியாவில் வாங்கப்பட்ட எல்லா ஒன்பிளஸ் மொபைலுக்கும் இந்த வாரன்டி பொருந்தும். அதே சமயம், OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9, and OnePlus 9R இந்த நான்கு மாடல்களுக்கு மட்டும் REPLACEMENT இல்லையென அறிவித்திருக்கிறது.

அதாவது, இந்த நான்கு மாடல்களுக்கு உதிரிபாகங்கள் இல்லையென்பதால், இந்த மொபைல்களுக்கு மட்டும் வாரன்ட்டி இல்லை என குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அந்த மாடல்களுக்கு இணையான கூப்பனை வழங்குகிறார்களாம். இந்த மாடல் மொபைல்களை ஒன்பிளஸ் அதன் அஃபிசியல் வெப்சைட்டில் தற்போதும் விற்கிறது. அப்படியெனில் எப்படி உதிரிபாகம் மட்டும் இல்லை என சர்வீஸ் சென்ட்டருக்குப் பக்கத்திலிருக்கும் கடையில் விசாரிக்கத்தொடங்கினோம். தற்சமயம் இல்லை, இல்லவே இல்லையென்று சொல்லவில்லை. 90 நாட்களில் சரி செய்து கொடுத்துவிடுகிறோம் என வாக்குறுதி கொடுக்கிறதாம் ஒன்பிளஸ். அதாவது கூப்பன் வேண்டாம், என் மொபைலை நீங்கள் சரி செய்து கொடுக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக பேசினால், ' 90 நாட்கள் காத்திருங்கள்' என்கிறார்களாம்.

கூப்பன் விலை. 

ONE PLUS 8T - 20000
OnePlus 9 - 23500
One Plus 9R 19000
One Plus 8 Pro - 25,500

8GB RAM, 12 GB RAM என இரு மாடல்களுக்கும் ஒரே விதமான விலையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. புது மொபைலுக்கு மட்டும் இரு வேறு விலை வைத்துத்தானே விற்கிறீர்கள்.பிறகு எப்படி இரண்டு மாடலுக்கும் ஒரே கூப்பன் என கேட்டதற்கு, ஒன்பிளஸ் நிர்வாகத்திடம் சரியான பதில் இல்லை.

இந்த கூப்பன்களைப் பெற்றுக்கொண்டு, ஒன்பிளஸ் தளத்தில் வேறு மொபைல்களை வாங்கிக்கொள்ளலாம் என்கிற ஆஃபரை வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும் OnePlus 10R மொபலை வாங்க முடிவு செய்தால், கூடுதலாக 4500 ரூபாய் ஆஃபர் தருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். (அது சற்று சுமாரான மொபைல் என்பதால், யோசித்து வாங்குவது நலம்). அதே சமயம், பலரும் ஒன்பிளஸ் நிர்வாகத்தை இந்த அறிவிப்பிற்காகப் பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம், இந்த GREEN LINE இஸ்யூ வெறுமனே ஒன்பிளஸ் நிறுவன மொபைல்களில் மட்டும் தென்படவில்லை. விவோ, ஓப்போ, சாம்சங், POCO என எல்லா நிறுவன மாடல்களிலும் தான் வந்தது. சில ஆப்பிள் பயனாளர்கள் கூட இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கல் வெளியாகின. ஒன்பிளஸ் நிறுவனத்தை பின்பற்றி மற்ற நிறுவனங்கள் எப்போது இதுகுறித்து வாய் திறக்கப் போகிறார்கள் என தெரியவில்லை.