சாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
இந்திய சந்தையில் நாள்தோறும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் குறைந்த விலையில், அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுவிட்டன. இதனால் தங்கள் இடத்தை இழந்த சில நிறுவனங்கள் மீண்டும், வாடிக்கையாளர்களை வசப்படுத்த சில புதிய மாடல் செல்போன்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி சாம்சங் நிறுவனம் இந்த மாதத்திற்கு தனது புதிய மாடல்களான கேலக்ஸி ஜெ4 மற்றும் ஜெ6 ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளன. இவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
அந்தத் தகவல்களின்படி, ஜெ6 மாடலை பொறுத்தவரையில் 5.6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேவுடனும், ஹக்டா-கோர் ப்ராசஸருடனும் வெளியாகிறது. அத்துடன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 எம்பி கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி சென்சார் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பின்புறத்தில் கைரேகை பதிவு செய்யும் சென்சார் உள்ளது. இதன் இண்டெர்னல் ஸ்டோரேஜ் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ற இரண்டு ரகங்களில் வெளியாகிறது. இதுதவிர கூடுதலாக மைக்கோ கார்டு பொறுத்தும் வசதி உள்ளது. 3,000 எம்ஏஹெச் பேட்டரியுடன், இரண்டு சிம் கார்டு பொறுத்தும் வசதி இதில் இருக்கிறது. சிம் கார்டில் வோல்ட் வசதியும் உள்ளது.
ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. இதில் குவாட்-கோர் ப்ராசஸ்ர் இடம்பெற்றுள்ளது. இதிலும் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்கள் வெளியாகின்றன. அவற்றுக்கு ஏற்றார்போல் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி இண்டடெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கும். பின்புறத்தில் 13 எம்பி மற்றும் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களுக்கும் எல்இடி ஃப்ளாஷ் லைட் உள்ளது. இதிலும் வோல்ட் வசதியுடன் 2 சிம் கார்டுகள் பொருத்த முடியும். இதன் பேட்டரி 2,800 அல்லது 3.000 எம்ஏஹெச் ஆக இருக்கும். மேலும் ஜெ4 மற்றும் ஜெ6 ஆகிய இரண்டும் ஆண்ட்ராய்டு ஒரியோ 8.0 இயங்குதளம் கொண்டது. இவற்றின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.