பென்னு நாசா
டெக்

பென்னு சிறுகோளின் மாதிரிகள்: உயிரின் அடிப்படை அமினோ அமிலங்கள் கண்டுபிடிப்பு

பென்னு சிறுகோளில் உயிர்க்கான அடிப்படை அமினோ அமிலங்கள்: ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை

Jayashree A

விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யத்தை கொடுத்த பென்னு சிறுகோள் மாதிரியின் ஆராய்ச்சி முடிவுகள்...

தினம் ஒரு தகவல் போன்று விண்வெளி ஆராய்ச்சியாளார்கள் தினமும் நமக்கு ஒரு தகவலைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதன்படி தற்பொழுது பென்னு சிறுகோள் மாதிரியின் விவரத்தை நமக்கு கூறியுள்ளார்கள்.

பென்னு சிறுகோள்

2016ல் பூமிக்கு மிக அருகில் சிறுகோள் ஒன்று கடப்பதை தெரிந்துக்கொண்ட நாசாவின் சிறுகோள் ஆய்வாளர்கள், அந்த சிறு கோளிலிருந்து சில மாதிரிகளை எடுத்து அதை ஆய்வுக்கு உட்படுத்த நினைத்தது. இவர்களின் ஆய்வின் படி பூமி எப்படி உருவாகி இருக்கும்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் நினைத்த அவர்கள், 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நாசா ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி சிறுகோளைக் கண்காணிக்கத் தொடங்கியது. இந்த சிறுகோளிற்கு பென்னு என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தின் வேலை என்ன?

ஓசிரிஸ் ரெக்ஸின் திட்டமானது சிறு கோள்களை ஆய்வு செய்து அவற்றின் குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இவ்வாறு செய்யப்படுகின்ற ஆராய்ச்சியில் சூரியக்குடும்பத்தின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும், கோள் உருவாக்கம், புவியியல் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை கரிமச்சேர்மங்களின் மூலம் ஆராய்ச்சியில் தெரியவரும் என்கிறார்கள்.

ஓசிரிஸ் ரெக்ஸின்

இதற்காக அனுப்பப்பட்டதுதான் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம். 2016ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 2 கோடி கி.மீ தூரம் பயணித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி பென்னு விண்கல்லை நெருங்கியது. அதன்பிறகு தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை ஆய்வு செய்து வந்த ஓசிரிஸ்ரெக்ஸ், விண்கல்லின் துகள்களை எடுப்பதற்கான இடத்தை தேர்வு செய்தது.

பின், விண்கல்லின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று ஓசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திர கைகளால், விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்து தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேகரித்துக்கொண்டது. பிறகு தனது பணியை 2020ம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ், தான் சேகரித்த மாதிரியுடன் பூமியில் தரையிறங்கியது.

பென்னு மாதிரியின் ஆராய்ச்சி

ஓசிரிஸ் ரெக்ஸ் சேகரித்து வந்த சிறுகோளின் மாதிரியை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அது அவர்களுக்கு சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓசிரிஸ் ரெக்ஸ்

அதாவது நமது கிரகத்தில் வாழ்க்கைக்குத் தேவையான புரதங்களை உருவாக்கும் 20 அமினோ அமிலங்கள் உள்ளன, அதே போல் பென்னு விண்கல் மாதிரியில் முக்கியமான 14 அமிலங்கள் உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ஆனால் ஏன் பென்னுவில் உயிரினங்கள் ஏதும் இல்லை என்ற கேள்வியும் அவர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும், இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஆரம்பகால சூரிய மண்டலத்தில் உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான நிலைமைகள் பரவலாக இருந்தன என்பதைக் காட்டுகின்றன. நீர் மற்றும் பிற கரிம சேர்மங்களுடன் அமினோ அமிலங்களின் இருப்பு, பிற கிரகங்கள் மற்றும் நிலவுகளில் உயிர்கள் உருவாகியிருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

விண்கல் பென்னு

பென்னுவில் உயிரின் வேதியியலைத் தொடங்குவதற்கு மிகவும் பொருத்தமான ஒரு பண்டைய சூழலுக்கான ஆதாரத்தையும் ஆராய்ச்சி குழு கண்டறிந்ததுள்ளது. பென்னு மாதிரியில் அதிக செறிவுள்ள அம்மோனியா மற்றும் ஃபார்மால்டிஹைட் உள்ளது, அவை அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க வினைபுரியும்.

சில முக்கிய கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:

அமினோ அமிலங்கள்: உயிருக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 14 பென்னு மாதிரிகளில் காணப்பட்டன.

நியூக்ளியோபேஸ்கள்: டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உருவாக்கத்திற்கு அவசியமான ஐந்து நியூக்ளியோபேஸ்களும் கண்டறியப்பட்டன.

அம்மோனியா மற்றும் ஃபார்மால்டிஹைடு: இந்த சேர்மங்களின் அதிக செறிவுகள் கண்டறியப்பட்டன, அவை அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க துணை புரியும்.

நீர் மற்றும் கரிம சேர்மங்கள்: நீர் மற்றும் பிற கரிம சேர்மங்களின் இருப்பு, பென்னுவில் வாழ்க்கைக்குத் தேவையான நிலைமைகள் இருந்ததைக் குறிக்கிறது.

இந்த கண்டுபிடிப்புகள் பூமிக்கு அப்பால் உள்ள உயிர்களைத் தேடுவதில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும், மேலும் நமது சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.