சந்திரயான் 3, லூனா 25
சந்திரயான் 3, லூனா 25 புதிய தலைமுறை
டெக்

வெற்றிபெற்ற சந்திரயான் 3.. தோல்வியடைந்த ரஷ்யாவின் லூனா 25 விண்கலம்! இரண்டிலும் நடந்தது என்ன?

Prakash J

சுமார் 47 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. ரஷ்யாவின் லூனா - 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தரையிறக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த விண்கலம், இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று சொல்லப்பட்டது.

லூனா 25 - ரஷ்யா

அதாவது, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, அதற்குமுன்பே இந்தியா கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஏவியிருந்தது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை, ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த தருணத்தில்தான், லூனா 25 வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு வந்தடைந்தது. ஆனால் லூனா 25 எதிர்பார்த்ததற்கும் மிஞ்சிய வேகத்தில் பயணிப்பதால் தரையிறங்குவதில் கோளாறு ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படியே கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை லூனா 25 விண்கலத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, தரையிறங்குவதற்கு ஏற்றவாறு விண்கலத்தின் பாதையை மாற்றும்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுவட்டப் பாதையில் இருந்து நகர்ந்த லூனா 25 நிலவின் பரப்பில் மோதி நொறுங்கியது.

அதேநேரத்தில், இஸ்ரோ அறிவித்தபடி, இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறங்கி உலக நாடுகளையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு, இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. என்னதான் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா முன்னோடியாக இருந்தாலும், லூனா 25 விஷயத்தில் தோல்வி கண்டிருப்பது, அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யாவைப் பொறுத்தமட்டில் கடந்த 1967லேயே நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பிறகு நிலவு குறித்த ஆய்வுகளை அந்த நாடு மேற்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

சந்திரயான் 3

ஆனால் இந்தியா தொடர்ந்து சந்திரயான் திட்டம் மூலம் நிலவு குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிடர், நிலவின் தென்துருவ பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து பல்வேறு முக்கிய தகவல்களை அனுப்பிவைத்தது. சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை மேம்படுத்தியும் இந்தியா சாதித்துள்ளது. முக்கியமாக, 40 நாள் பயணத்துக்கு பிறகே இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. ஆனால் ரஷ்யா, தன்னுடைய லூனா 25 திட்டத்தில் அவசரம் காட்டியது. வெறும் 15 நாட்களுக்குள் நிலவின் தென்துருவத்தில் லூனா 25 விண்கலத்தை ஆய்வு செய்ய தரையிறக்க முயன்று சிக்கலை சந்தித்தது. இதனால்தான் இந்தியா நிலவின் தென்துருவத்தில் இன்று கால்பதித்துள்ளது உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது.