புதிதாக பி.எஃப் திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் என்ற இஎல்ஐ (ELI - Employment Linked Incentive) திட்டத்தை வருங்கால வைப்பு நிதி செயல்படுத்த உள்ளது. இதன்படி புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணையும்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு தவணையாக அதிகபட்சம் 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும், நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 2027 ஜூலை 31ஆம் தேதி வரை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும். புதிய இஎல்ஐ திட்டத்தால் சுமார் 3.5 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என்று மண்டல தொழிலாளர் வைப்பு நிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்தார்.