செல்போனில் சில க்ளிக்குகள் போதும்... அடுத்த அரை மணி நேரத்தில் விரும்பிய உணவு இருக்கும் இடம் தேடி வந்துவிடும். இந்த வசதி இந்தியாவில் பெரிய, நடுத்தர நகரங்களை தொடர்ந்து சிறு நகரங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வகைகளை வாங்கும் சந்தை தற்போது 32 பில்லியன் டாலர்களாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இது 4 மடங்கு அதிகரித்து சுமார் 140 பில்லியன் டாலர்களை தொடும் என சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வளம் கொழிக்கும் தொழில் என்பதால் இதில் போட்டியும் தலைதூக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஸ்விக்கி, எடர்னல் ஆகிய நிறுவனங்கள் இத்தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அடுத்து வாகன சேவை ஜாம்பவனான ரேபிடோவும் களமிறங்க உள்ளது.
ஸ்விக்கி, எடர்னல் நிறுவனங்களை விட அதிக பணியாளர்களை ரேபிடோ கொண்டுள்ளது. ரேபிடோவிடம் 40 லட்சம் பேர்உள்ள நிலையில் ஸ்விக்கியிடம் 4.4 லட்சம் பேரும் எடர்னலிடம் 5.3 லட்சம் பேரும் உள்ளனர். மேலும் போட்டியாளர்களை விட கமிஷன் தொகையை குறைத்து வாங்க திட்டமிட்டுள்ளதும் இத்துறையில் கடும் போட்டிகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இதற்கிடையே டாடாவின் பிக் பேஸ்கட் (BIG BASKET) நிறுவனமும் உணவு வினேியோக சேவைத்துறையில் முனைப்பு காட்டி வருகிறது. 10 நிமிடத்திற்குள் உணவு வினியோகம் என்ற இலக்கை அடுத்தாண்டிற்குள் எட்ட இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. உணவு வினியோக சேவை துறையில் அதிகரிக்கும் போட்டி நுகர்வோருக்கு நிச்சயம் சுவையான தகவலாகவே இருக்கும்