QR ஸ்கேனிங்
QR ஸ்கேனிங்  முகநூல்
டெக்

‘பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் உணவு லேபிள்களில் மாற்றம் தேவை’

ஜெனிட்டா ரோஸ்லின்

தற்போதுள்ள சூழலில் பணப்பரிமாற்றத்தில் தொடங்கி உணவு விற்பனைவரை எல்லாவற்றிற்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவி தேவையாகிறது.

எந்தவகையிலும் மனிதனை பாதிக்காத வகையில் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி நல்லதொரு மாற்றத்திற்காக பயன்படு(த்தப்படு)கிறது என்றால் அதில் தவறில்லை. அப்படியொரு நல்ல விஷயம்தான், QR Code நடைமுறை. ’இந்த கதவை திறந்து உள்ளே சென்றால் புதையல் இருக்கும்’ என்பது போல ‘QR கோட் இருந்தால் போதும்... அதன் வழியே பண பரிவர்த்தனம், லிங்க் ஷேரிங், புத்தகம் படிப்பது என எல்லாவற்றையும் செய்து விடலாம்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

QR ஸ்கேனிங்

இந்த வரிசையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றொரு முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன்படி பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும் வகையில் உணவு பொருள்களில் QR வைக்க பரிந்துரைத்துள்ளது அது.

இந்த கோடை ஸ்கேன் செய்யும்போது அந்த உணவுப்பொருள் பற்றிய முழு விவரம், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள், ஊட்டசத்து விவரம், ஒவ்வாமையை ஏற்பத்தும் பொருள்கள் என எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள முடியுமென தெரிகிறது. இதனால் உண்ணும் உணவு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை நம்மால் உறுதிசெய்ய முடியும்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் பார்வை குறைபாடுடையவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்து வாங்கிட முடியுமென்கின்றனர் FSSAI அதிகாரிகள். மேலும் அனைத்து தரப்பு நுகர்வோரும் பாதுகாப்பான முறையில் தங்களுக்கு தேவையான பொருட்களை விரைவாக அறிந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

அறிவியல் மற்றும் தரநிலைகள் பிரிவின் இயக்குனர் அமித் சர்மா கையொப்பமிட்ட இதுதொடர்பான அறிக்கையில், “உணவை பற்றிய அனைத்து தகவல்களையும் பெறுவது என்பது அனைத்து தரப்பு குடிமக்களுக்கும் இருக்கும் அடிப்படை உரிமை.

எனவே பார்வை குறைபாடுடையவர்கள் உள்பட அனைத்து வகையான நுகர்வோரும் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிய வேண்டும். அதற்கு லேபிளில் அவர்களுக்கு ஏற்றார்போலவும் கோட் அச்சிடப்பட்டிருக்க வேண்டியது அவசியம். பார்வையற்றோரும் இதை அறிந்துகொள்ளும் வகையில் லேபிளை எப்படி வடிவமைக்கலாம், என்னமாதிரியான மாற்றங்களை செய்யலாம் என ஆலோசனை கூற உணவு வணிக ஆபரேட்டர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்றுள்ளார்.

QR ஸ்கேனிங்

FSSAI -ன் லேபிளிங் மற்றும் டிஸ்பிளே விதிமுறைகள் 2020 ன் படி,

  • “உணவு பொருட்களின் லேபில்களில், அந்தப் பொருளில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்களை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.

  • தயாரிக்கப்பட்ட பொருளின் பெயர், காலாவதி தேதி, ஊட்டசத்து பற்றிய விவரங்கள், உணவுப்பொருள் மற்றும் அதில் சேர்க்கப்படுள்ள பொருள்கள் சைவமா அல்லது அசைவமா என்பதன் லோகோ, ஒவ்வாமையை ஏற்படுத்த கூடிய பொருள்கள் என்று அனைத்தும் உள்ளடங்கியதாக லேபிள் இருக்க வேண்டும்”

    என்று தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 மாற்றுத்திறனாளிகளிக்கும் அனைத்து சேவைகளும் கிடைக்கவேண்டுமென கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்த்தக்கது.