ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் ஏவப்பட இருந்த பிஎஸ் எல்வி சி 59 ராக்கெட் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவும் இஸ்ரோவும் இணைந்து சூரியனின் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக ‘புரோபா-3’ என்ற இரு இணை செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது.
‘புரோபா-3’ திட்டத்தில் உள்ள 2 செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. சூரியனின் ஒளிவட்ட பகுதி மற்றும் சூரியனின் வளிமண்டலமான கொரோனாவை ஆய்வு செய்யும் வகையில் இந்த இணை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் 3.08 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்கியது. இதனை முடித்து கொண்டு இன்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது, ப்ரோபா3 செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திட்டம் நாளை மாலை 4 மணி 12 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் ராக்கெட்டில் பிரச்சனை இல்லை என்றும் கடைசி நேரத்தில் செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட ஒழுங்கின்மை காரணமாக தற்காலிகமாகதான் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நவம்பர் 29ஆம் தேதி திட்டம் செயல்படுத்தப்பட இருந்த நிலையில், ஏற்கனவே ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.