டெக்

செமிகண்டக்டர்கள் உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன - பிரதமர் மோடி பேச்சு

Veeramani

பெங்களூருவில் செமிகான் இந்தியா 2022 மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, "நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செமிகண்டக்டர்கள் உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன" என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் இந்தியாவின் முதல் செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது, நாடு தற்போதுதான் வணிகத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும், இப்போது இந்தியாவை துடிப்பான செமிகண்டக்டர்  அமைப்பாக மாற்றுவது அவசியம் என்றும்  கூறினார். செமிகண்டக்டர் மிஷன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.



இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு சவால்களை சந்திப்பதில் எப்போதும் விருப்பம் உள்ளது. இப்போது இந்தியாவை ஒரு துடிப்பான செமிகண்டக்டர் உற்பத்தி அமைப்பாக மாற்றும் தேவை உள்ளது " என்று கூறினார்.

மேலும், "இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டிற்கு தேவையான இளம் இந்திய திறமையாளர்களை கொண்டுள்ளோம். நம்மிடம் ஒரு விதிவிலக்கான செமிகண்டக்டர் வடிவமைப்பு திறமை உள்ளது, இது உலகின் 20 சதவீத பொறியாளர்களை உருவாக்குகிறது. இன்றைய உலகில் செமிகண்டக்டர்களின் பங்கு மிக முக்கியமானது. உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் இந்தியாவை முக்கிய பங்குதாரராக நிலைநிறுத்துவது நமது நோக்கமாகும். செமிகண்டக்டர் தொழில்நுட்பத்திற்கான கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியா இருப்பதற்கு உயர் தொழில்நுட்பம், உயர் தரம் மற்றும் உயர் நம்பகத்தன்மை ஆகியவை காரணமாக உள்ளது " என்று அவர் தெரிவித்தார்.