டெக்

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் - பயனாளர்கள் அதிர்ச்சி

webteam

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இதில் உள்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறை ஒப்புக்கொண்ட பேஸ்புக் மன்னிப்பும் கோரியது. இந்த விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் அனுமதி வழங்கியுள்ள மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்தப் புகைப்படங்கள் வெளியே லீக் ஆகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பயனாளர்களின் அனுமதியுடன் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்த பல மூன்றாம் தர செயலிகளுக்கு பேஸ்புக் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் செயலிகள் மூலமே புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. பேஸ்புக் அனுமதிக்கும் புகைப்படுத்துக்கான API முறையில் குறை இருந்துள்ளதாகவும், அதுவே புகைப்படம் லீக் ஆக காரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறி பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 

தற்போது அந்தக் குறை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் லீக் ஆன புகைப்படங்களை அழிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற பிரச்னைகள் இனி எதிர்காலங்களில் வராமல் தடுக்க சிறப்பு டூலை உருவாக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.