டெக்

அதிகாலையில் அப்செட்: மன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்

webteam

வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் இன்று அதிகாலை சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக செயலிழந்ததால் பயனர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

600 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப் இன்று அதிகாலை சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக செயல் இழந்ததால், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பாதிப்பு இந்தியா, கனடா, பிரேசில், தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை வாட்ஸ் அப், ட்ராக் செய்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்னைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் இ-மெயில் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதிகாலை சுமார் இரண்டரை மணி நேரம் வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பில் பிழை இருப்பதாகவும் எனவே இந்த பீட்டா பதிப்பினை பயனர்கள் யாரும் தரவிறக்கம் செய்யவேண்டாம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து, பீட்டா பதிப்பிற்கான மாற்றத்துக்கான புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாட்ஸ் அப் சேவை செயல் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.