ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ஏ7’ மாடல் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றன. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஓப்போ நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ஏ7’ மாடலை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனா மற்றும் நேபாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 16,500 ஆகும். இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இளம்பச்சை மற்றும் தங்க நிறத்தில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன், நவம்பர் 22ஆம் தேதி முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.
இதில் 6.2 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜை பொறுத்தவரையில் கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ ஜிப் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும், 13 எம்பி மற்றும் 2 எம்பி பின்புற கேமராவும் உள்ளது. 4ஜி வோல்ட் வசதியுடன் இரண்டு சிம்களை இதில் பொருத்த முடியும். அத்துடன் 4,230 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.