டெக்

ஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.!

ஆபத்தாகும் ஆன்லைன் வீடியோ செயலிகள் : மனநிலை பாதிப்பு முதல்.. மரணம் வரை.!

webteam

இந்தியா உட்பட உலகம் முழுவதும் காலத்திற்கு ஏற்ப பொழுதுபோக்குகளும், கலாசாரங்களும் மாறிக்கொண்டே வருகின்றன. இந்தியாவில் 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இளைஞர்களின் பொழுதுபோக்காக ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றே கூற வேண்டும். அதன்பின்னர் 10 வருடங்களில் பெரும் பூதமாக இந்த ஸ்மார்ட்போன்களும், அதன் செயலிகளும், சமூக வலைதளங்களும் உருவெடுத்துள்ளன. நவீன மயம் என்பதை முழுவதும் ஒதுக்கிவிட முடியாது என்றாலும், அவற்றில் நன்மைகளை விட, தீமைகளே அதிகம் பரவுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

படிக்கும் மாணவர்களுக்கும், பருவ இளைஞர்களுக்கும் பெரும் எதிரி யார் ? என்று கேட்டால், அனைவருமே சட்டென கூறும் வில்லனாக இருக்கின்றன ஸ்மார்ட்போன்களும், அவற்றின் செயலிகளும். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஸ்மார்ட்போனிற்கு அடிமைகளாவே மாறிவிட்டனர் என்று கூறலாம். இதில் பள்ளிச்சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஸ்மார்ட்போன் கேம்ஸ்களால்தான். 

கிளாஸ் ஆஃப் கிளான்ட்ஸ், போக்கி மான், ப்ளூ வேல் என்று ஆபத்தாக அறியப்பட்ட வரிசையில் கடைசியாக இணைந்தது பப்ஜி. இவை மாணவர்களின் நேரத்தை பறித்துக்கொள்வது மட்டுமின்றி, அவர்களின் மனநிலையை முற்றிலுமாக மந்தமாக்கி விடுகிறது என்கின்றனர் வல்லுநர்கள். மாணவர்கள் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள் என்றால், மறுபுறம் பருவ இளைஞர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் டிக் டாக் போன்ற வீடியோ செயலிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்திய இளைஞர்களிடம் குறுகிய காலத்தில் பிரிக்க முடியாத ஒரு விஷயமாக ஆன்லைன் வீடியோக்கள் மாறிவிட்டன. இதற்கு முக்கிய காரணம், சினிமாக்களில் வரும் ஹீரோக்களை கொண்டாடித் தீர்த்த இந்திய இளைஞர்கள் தங்களை ஹீரோக்கள் போன்று காட்டும் செயலிகளை மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். இதுபோன்ற செயலிகளில் 30 முதல் 60 நொடிகள் வரை நீடிக்கும் வீடியோக்களில் தங்கள் திறமையை காட்டும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், அந்த நேரத்தில் சாகசத்தை காட்ட வேண்டும் என்று சோகத்தில் முடியும் இளைஞர்களும் ஏராளம். 

தமிழகத்திலேயே கூட, வீடியோ செயலிகளில் வந்த விமர்சனங்களுக்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி விஷம் குடிப்பதுபோல தற்கொலை, கழுத்தை அறுப்பது போல நடித்து நிஜத்தில் அறுத்துக்கொண்டது, தலைகீழாக குதிப்பதாக கழுத்தெழும்பை உடைத்துக்கொண்டு இறந்தது போன்ற துயரங்களும் நிகழ்ந்துள்ளன.

தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக கிடைக்கும் வீடியோ செயலிகளை முறையாக பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறும் உளவியல் வல்லுநர்கள், இதுபோன்ற செயலிகளுக்கு குடும்ப பெண்கள் அடிமைபோல ஆகிவிடுவது வருந்தத்தக்கது என்கின்றனர். அண்மையில் வெளிவந்த ஆய்வு , உலக அளவில் இந்தியர்களே அதிக அளவு நேரத்தை ஆன்லைன் வீடியோ பார்க்க பயன்படுத்துகின்றனர் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.