அலெக்ஸி லியோனோவ்
அலெக்ஸி லியோனோவ் google
டெக்

விண்வெளியில் 12 நிமிட நடைபயணம்.. உலகையே சோவியத் யூனியன் விண்வெளி வீரர் திரும்பி பார்க்கவைத்த தினம்!

Jayashree A

மனிதகுலத்தின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எல்லை என்பதே கிடையாது. அது எல்லா துறைகளிலும் தன்னுடைய பாய்ச்சலை செலுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று நாம் விண்வெளி கண்டுபிடிப்புகளில் நீண்ட தூரம் பயணித்து இருக்கிறோம். ஆனால், அதற்கு தொடக்க கால கண்டுபிடிப்புகள் மிகவும் ஆச்சர்யம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். அந்த வகையில் விண்வெளி துறையில் ஒரு ஆச்சர்யம் தரக்கூடிய நாள் தான் இன்று.

விண்வெளி உலகைப்பற்றி எதுவுமே தெரியாத ஒரு காலகட்டத்தில் அதன் அதிசயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நினைத்த சோவியத் யூனியன் முதன்முறையாக 1964 அக்டோபர் 12ம் தேதி வோஸ்கோட் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு விஞ்ஞானி பயணித்தனர், ஆனால் அவர்கள் விண்வெளியில் வோஸ்கோட் 1 கேப்சூலைவிட்டு வெளியே வரவில்லை. உள்ளிருந்தபடியே விண்வெளியை சுற்றிவிட்டு பூமியில் தரையிறங்கினர்.

அதற்கு அடுத்த கட்டமாக , விண்வெளியில் மனிதர்களை நடக்கவைக்க நினைத்த சோவியத் யூனியன் அதற்கான முயற்சியில் இறங்கியது. அதன்படி, விண்வெளி வீரர்கள் அலெக்ஸி லியோனோவ் மற்றும் பாவெல் பெல்யாயேவ் என்ற விண்வெளி வீரர்கள் இருவரை தேர்வு செய்து, இருவரையும் வோஸ்கோட் 2 விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு அனுப்பியது. சோவியத் யூனியன் நினைத்தது போலவே அலெக்ஸி லியோனோவ் 12 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து சாதனைபுரிந்தார்.

இயல்பாக உலகத்தில் மனிதரே இல்லாத அல்லது மொழி தெரியாத ஒரு இடத்திற்கு செல்ல நாம் பயப்படுவோம். ஆனால் உலகத்தை தாண்டிய ஒரு வெற்றிடத்தில் ஒரு மனிதன் பயணிக்கிறார் என்றால் முதலில் அவருக்கு அசாத்திய தைரியமும் திறமையும் இருக்கவேண்டும். இது இரண்டும் அலெக்ஸி லியோனோவ் இருந்தது. அதனால் விண்வெளியில் பயணிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற வரலாற்று சாதனை புரிந்த அலெக்ஸி லியோனோவ் 1934ம் ஆண்டு மே மாதம் 30 ம் தேதி சோவியத் யூனியனில் பிறந்தவர். ஒருமுறை டைம் புகைப்படக் கலைஞர் மார்கோ க்ரோப் 2015 இல் அலெக்ஸி லியோனோவ் சந்தித்து விண்வெளியில் இவரின் அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, ​​"எனக்கு ஒலி நினைவில் இருப்பது போல் எனக்கு எதுவும் நினைவில் இல்லை - விண்வெளியிலிருந்து பூமியில் முழு கருங்கடலையும், கிரிமியன் தீபகற்பத்தையும் பார்த்தேன். இது வரைபடம் அல்ல, என்று நான் என்னுள் சொல்லிக்கொண்டேன். என்னால் இப்போது ஒரு பென்சிலை எடுத்து நான் பார்த்ததை வரைய முடியும், ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான் பார்த்ததை என் நினைவில் வைத்திருந்தேன். நான் மேலே பார்த்தேன், பால்டிக் கடல், கலினின்கிராட் வளைகுடா இருந்தது. இது மிகவும் அசாதாரணமானது” என்று கூறியுள்ளார். இவர்11 October 2019  தனது 85 வது வயதில் ரஷ்யாவில் காலமானார்.

விண்வெளியில் முதல் மனிதன் 12 நிமிடங்கள் மிதந்து சாதனை புரிந்த தினம் இன்று.