டெக்

நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஷேர் செய்து பயன்படுத்துவோரா நீங்கள்? - வெளியான புதிய அறிவிப்பு

EllusamyKarthik

பாஸ்வேர்டை பகிர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. தங்களது நெட்ஃபிளிக்ஸ் கணக்கை, பிறருக்கு பகிரும் பயனர்கள், அப்படி பகிரப்படும் கூடுதல் உறுப்பினர்களுக்கான கட்டணத்தை செலுத்தச் சொல்ல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான பரிசோதனை வழிகளை விரைவில் தொடங்க உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனை முயற்சியை, முதல்கட்டமாக சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளில் செயல்முறைபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் கணக்குகள், எப்போது, எப்படி பகிரப்படுகிறது என்பதில் சில குழப்பங்கள் நிலவி வருவதாகவும், அது குறித்து கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கணக்குகளை வைத்துள்ள பயனர்கள் சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே அதன் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்வது உண்டு. அதற்கு கடிவாளம் போடும் வகையில் இந்த முடிவை நெட்ஃபிளிக்ஸ் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. 

பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதால் தங்களது சந்தா உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் தரமான புதிய படைப்புகளை உருவாக்குவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாகவும் நெட்ஃபிளிக்ஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.