புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடிப்பவர்களுக்கு 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 64 லட்சத்து 81 ஆயிரம்) பரிசு தொகையை நாசா அறிவித்துள்ளது.
பூமியில் வாழ்ந்துவரும் மனிதர்கள் மற்றும் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய விண்கலத்தில் பயணம் செய்யும் வீரர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும், காற்றில் ஏற்படும் மாசு போன்றவற்றை அறிந்து நடவடிக்கை எடுக்க, ஏரோசல் சென்சார்கள் தேவைப்படுகின்றன. காற்று மாசுவை குறைப்பதற்காக ராபர்ட் வுட் ஜான்சன் ஃபவுண்டேஷன் (RWJF) உடன் இணைந்து நாசா, ஏரோசல் சென்சார்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.
குறைந்த எடை மற்றும் குறைந்த விலையில் காற்றில் உள்ள தூசுப் படலங்களை கண்டறியக்கூடிய ஏரோசல் கருவியை, சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தி வடிவமைப்பவருக்கு 100,000 டாலர்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சென்சார் ஆனது பூமி மற்றும் விண்வெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்க கூடியதாக இருக்க வேண்டும். பூமியிலும், விண்கலத்திலும் பயணிக்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த சென்சார் உருவாக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு முன் https://www.earthspaceairprize.org/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் சென்சாரினை நாசாவிடம் ஒப்படைக்க வேண்டும்.