UPI - France
UPI - France Twitter
டெக்

UPI சேவை இனி பிரான்ஸிலும்... பிரதமர் மோடியின் புதிய அறிவிப்பு!

Rishan Vengai

டிஜிட்டல் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியைக் குறிப்பதில் பெரும் பங்கு வகிப்பது `யுனிஃபைடு பேமெண்ட்ஸ் இண்டர்ஃபேஸ்’ எனப்படும் UPI பணப் பரிவர்த்தனை தான். பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் சாலையோரத் தள்ளுவண்டி கடைகள் வரை தற்போது யுபிஐ மூலம் தான் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அந்தவகையில் இந்திய மக்களின் அன்றாட பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது UPI ஆன்லைன் பரிவர்த்தனை. ஆனால், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, இந்திய மக்கள் பணப்பரிவர்த்தனை செய்ய, அந்த நாட்டுக் கரன்சியாக மாற்றி வைத்துக்கொண்டோ அல்லது அந்நியச் செலாவணி அட்டையான ஃபோரக்ஸ் கார்டையோ நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

UPI

இந்தநிலையில், தற்போது பிரான்ஸ் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நற்செய்தியளிக்கும் வகையில், விரைவில் பிரான்ஸ் நாட்டில் UPI சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன் முதற்கட்டமாக ஈபிள் டவருக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்குச் செல்ல இந்திய ரூபாயை கொடுத்தே டிக்கெட் வாங்க முடியும் என்று பிரான்ஸ் நாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இந்திய மக்கள் UPI பயன்படுத்த முடியும்! - பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தின் போது ​​பிரதமர் மோடி, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் மற்றும் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சர் ஆகியோருடன் நடத்திய சந்திப்பை பயனுள்ளதாக மாற்றினார். அந்த சந்திப்பில், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் நீண்டகால மூலோபாயக் கூட்டாண்மை குறித்த விவாதங்கள் கவனம் பெற்றன.

சந்திப்புக்குப் பிறகு பிரான்ஸில் இருக்கும் இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, “பிரான்ஸ் நாட்டில் UPI பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக்கொண்டுள்ளன. வரும் நாட்களில், இது ஈபிள் டவரில் இருந்து தொடங்கும். அதாவது இந்திய சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாய்களில் பணம் செலுத்த முடியும்” என்று கூறினார்.

UPI சேவையை உலகநாடுகளில் கொண்டு சேர்க்கும் இந்தியா பேமண்ட் கார்ப்பரேஷன்!

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்க ரிசர்வ் வங்கியும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கியதுதான் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) என்ற அமைப்பு. அந்த அமைப்பு ஏற்படுத்தியதுதான் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ் எனப்படும் யுபிஐ (UPI). இந்த யுபிஐ செயலியின்கீழ் 399 வங்கிகளும், நிதிச்சேவை நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

upi

மேலும் UPI சேவையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில், `நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ (NPCI) அமைப்பு பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துவருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு பிரான்சில் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் கட்டண முறையான லைராவுடன் NPCI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. இந்த ஆண்டு சிங்கப்பூரின் கட்டண முறையான PayNow உடன் UPI ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

UPI

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), பூட்டான் மற்றும் நேபாளத்தில் UPI ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு UPI சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் NPCI ஈடுபட்டுள்ளது.