டெக்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ சேவை பாதிப்பு - அலைமோதும் பயணிகள்!

webteam

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மிக விரைவில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் முதல் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்கள் ஆலந்தூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”MGR சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மட்டுமே செல்லும். ஆகையால் பச்சை வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நீல வழித்தடத்தில் மாறி விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

இதேபோல், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக MGR சென்ட்ரல் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சை வழித்தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் எழும்பூர் மற்றும் MGR சென்ட்ரல் மெட்ரோவிற்கு செல்ல வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை தவிர இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கோளாறை தீவிரமாக சரிபார்த்து கொண்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விரைவில் மெட்ரோ இரயிகள் வழக்கம் போல் இயக்கப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு மெட்ரோ ரயில் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் தொழில்து கோளாறு சரி செய்யப்பட்டு வருவதால் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் விம்கோ நகர் முதல் விமான ரயில் நிலையம் வரை இயக்கப்படும் நீல வழித்தடத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை எனினும் ஆலந்தூரில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யும் வரை பச்சை மற்றும் நீள வழிதடத்தில் இயங்க கூடிய ரயில்கள் ஆங்காங்கே 10 முதல் 15 நிமிடம் வரை நிறுத்தி இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், நந்தனம், கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. மிக விரைவாக தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும்” என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.