உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் தொடுத்துள்ள நிலையில் மெட்டா நிறுவனம் ரஷ்ய நாட்டின் அரசு ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சில தடைகளை விதித்துள்ளது.
குறிப்பாக அந்த பக்கத்தில் விளம்பரம் செய்யவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் தடை விதித்துள்ளது மெட்டா. இது தங்களது கொள்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என அந்நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க் செக்யூரிட்டி பாலிசியின் தலைவர் நதானியேல் க்ளீச்சர் (Nathaniel Gleicher) உறுதி செய்துள்ளார்.
“ரஷ்ய நாட்டின் அரசு ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்யவும், அதனை பணமாக்கவும் நாங்கள் தடை விதித்துள்ளோம். இது உலகம் முழுவதும் அந்த பக்கத்திற்கு செல்லுபடியாகும். இதற்கான பணிகளை எங்கள் தரப்பு தொடங்கிவிட்டது. இது வீக்-எண்ட் வரை தொடரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தங்கள் தளத்தின் மூலம் மக்களை பாதுகாப்பது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்களின் நலன் கருதி அந்த நாட்டில் உள்ள ஃபேஸ்புக் பயனர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பிரைவசி கருதி புரொபைல் படங்களை லாக் செய்யும் எக்ஸ்ட்ரா லேயர் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.