luna 25
luna 25 pt web
டெக்

லூனா 25 விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சிப் புகைப்படம்

PT WEB

ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் நிலவு மேற்பரப்பு ஆர்பிட்டர் லூனா 25 விழுந்த இடத்தை புகைப்படம் எடுத்துள்ளது.

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் விண்கலத்தை போல் அன்றி அனுப்பப்பட்ட ஏழு நாட்களில் விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 21 அல்லது 22 ஆம் தேதிகளில் சந்திரயான் 3க்கு முன்னதாக நிலவின் தென் பகுதியில் தரை இறங்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தின் தானியங்கி அமைப்பில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாஸ்கோவின் நேரப்படி பிற்பகல் 2.47 மணிக்கு லூனா 25 விண்கலத்தில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக விண்கலத்துடன் தொலைத்தொடர்பு ஏற்படுத்த தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டது.

உந்து விசை அமைப்பின் உயரத்தில் மாற்றம் செய்ய முயற்சி செய்தபோது ஏற்பட்ட விலகல் காரணமாக, சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி, நிலவின் மேற்பரப்பில் மோதியிருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் லூனா 25 நிலவின் மேற்பரப்பில் எந்தப் பகுதியில் விழுந்திருக்கும் என்பது குறித்தான தேடலில் நாசா, ஈசா, jaxa, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி நிறுவனங்களின் ஆர்பிட்டர்கள் ஈடுபட்டன. இந்நிலையில் நாசாவின் நிலவு மேற்பரப்பு ஆர்பிட்டர், லூனா 25 வெடித்து சிதறிய இடத்தை கண்டறிந்துள்ளது. லூனா 25 விழுந்த இடத்தில் அதனால் பத்து மீட்டர் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் உறுதிப்படுத்தியிருக்கிறது. நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த காட்சியையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.