தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் மது அருந்துவதும் சாதாரணமாக விஷயமாகவும், பேஷனாகவும் மாறியுள்ளது. தமிழகத்தில் இன்னும் அந்த கலாச்சாரம் முழுமையாகப் பரவவில்லை என்றாலும் இந்தியா முழுவதும் மேட்டுக் குடிப் பெண்களிடம் மெல்ல மெல்ல அது பரவி வருகிறது. அதுபோன்ற மது குடிக்கும் பெண்களுக்கு ஒரு அதிச்சிகரமான செய்தி ஒன்று காத்திருக்கிறது.
உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி (WCRF) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (AICR) இணைந்து ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டது.
1 கோடியே 20 லட்சம் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினம் ஒரு டம்ளர் மது அருந்தினாலே பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதாவது, தினந்தோறும், 10 மி.லி பீர் அல்லது வைன் குடிப்பதனால், 5 முதல் 9 சதவீதம் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆய்வு.
பெண்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதினால் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இதன் மூலம் 17 சதவிகிதம் புற்றுநோய் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே உடற்பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையைப் பின்பற்றுதல் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. மேலும், பச்சை காய்கறிகள், உலர்ந்த பழங்கள், பால் பொருட்கள், மிளகு, கேரட், ப்ரோக்கோலி, கீரை உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவு என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.