டெக்

அபாய நிலையில் பப்ஜி அடிக்ட்: பப்ஜி விளையாடுவது எப்படி என தேர்வில் எழுதிய மாணவன்!

அபாய நிலையில் பப்ஜி அடிக்ட்: பப்ஜி விளையாடுவது எப்படி என தேர்வில் எழுதிய மாணவன்!

webteam

கல்லூரி தேர்வு ஒன்றில் பாடம் தொடர்பாக எழுதாமல் பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதிய சம்பவம் அனைவைரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெற்றோர்கள் முதல் அரசாங்கம் வரை அனைவருக்கும் ட்ரெண்டிங் கேமான பப்ஜி தலைவலியாக உள்ளது. பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குஜராத் அரசு இந்த விளையாட்டை தடை செய்துள்ளது. 

இந்நிலையில் இந்த விளையாட்டு எந்த அளவுக்கு ஒருவரை அடிமையாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கடாக்கில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஒருவர், தனது கல்லூரி தேர்வு ஒன்றில் பாடம் தொடர்பாக எழுதாமல் பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதியுள்ளார். இந்த சம்பவம் அந்த மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த மாணவர், ''எனக்கு பப்ஜி மிகவும் பிடித்துபோனது. விளையாடுவதற்காக நான் கல்லூரிக்கு செல்லாமல் இருப்பேன். தேர்வுக்கும் 15 நாட்களுக்கு முன்னதாகவே நான் பப்ஜி விளையாட தொடங்கினேன். அதன் ஆர்வத்தால் தேர்வில் கவனம் கொள்ள முடியவில்லை. நான் எனது தேர்வு தாளில் பப்ஜி குறித்து எழுதியதால் எனக்கே என் மேல் கோபமாக உள்ளது. தற்போது என் போனை எனது பெற்றோர்கள் பிடிங்கிவிட்டனர். ஆனாலும் என் எண்ணமெல்லாம் பப்ஜி மீதே உள்ளது. அது எவ்வளவு அபாயகரமான விளையாட்டு என்பது எனக்கு தற்போது புரிகிறது'' என்று தெரிவித்துள்ளார்

மாணவர் குறித்து பேசிய அவரது ஆசிரியர், ''பொதுவாக மாணவர்கள் தங்களது தேர்வுதாளில் படத்தின் வசனங்களை எழுதிவைப்பார்கள். ஆனால் இந்த மாணவன் பப்ஜி விளையாட்டு குறித்து விரிவாக எழுதி வைத்துள்ளான். இது மிகவும் அபாயகரம் என்பதை உணர்ந்து உடனடியாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் மாணவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்து வருகின்றனர்''  என்று தெரிவித்துள்ளார்.