டெக்

காஞ்சிபுரம்: பேட்டரி வாகனங்களை தயாரித்து அசத்தி வரும் தனியார் நிறுவன ஊழியர்

kaleelrahman

காஞ்சிபுரம் அருகே பெட்ரோல், டீசலை தவிர்த்து பல வாகனங்களை பேட்டரியில் இயக்கி தனியார் நிறுவன ஊழியர் அசத்தி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளையராஜா, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே பேட்டரியில் இயக்கும் மிதிவண்டியை தயாரித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றையும் பேட்டரியில் இயக்கியுள்ளார்.

இதையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக முயற்சிசெய்து பேட்டரி கார் ஒன்றை ரூ.2 லட்சம் செலவில் தயாரித்துள்ளார். இந்த பேட்டரி காரில் இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் பயணம் செய்யலாம். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம் எனத் தெரிவித்தார்.

பெட்ரோல் அல்லது டீசல் காரில் சென்னை சென்றுவர 700 முதல் 800 ரூபாய் செலவாகும். ஆனால், இந்த பேட்டரி காருக்கு 7 யூனிட் மின்சாரம் மட்டுமே தேவைபடுகின்றது. தினமும் இந்த பேட்டரி காரில் 21 ரூபாய் செலவில் சென்னை சென்று வீடு திரும்புகிறார் இளையராஜா. அதேபோல் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து சென்னை சென்று வந்தால் 2 யூனிட் மின்சாரம் மட்டும் தேவைபடுகின்றது. இதற்கு 5 ரூபாய் மட்டுமே செலவாகிறது என்றார்.