டெக்

ஜியோ அடுத்த ஏர்செல்லா? பீதியில் வாடிக்கையாளர்கள்!

ஜியோ அடுத்த ஏர்செல்லா? பீதியில் வாடிக்கையாளர்கள்!

webteam

ஏர்செல்லை போன்றே ஜியோவின் தொடர்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக முழுமையாக முடங்கியது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் யாரையும் தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் காரணத்தினால் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டச் சிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடங்கியதாக அதன் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் அப்போது விளக்கம் அளித்திருந்தார். பின்னர், வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து, ஆன் செய்தால் வழக்கம் போல் தடையற்ற சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்னர் ஆன் செய்ததையடுத்து சிக்னல் கிடைக்க ஆரம்பித்ததுள்ளது. இதற்கிடையே தங்களது நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஏர்செல் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜியோ அழைப்புகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் இணையதள சேவையில் பெரும்பாலும் எந்த வித பிரச்னையும் இல்லை என்றும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ஏர்செல் நிறுவனம் திவால் என்று அறிவிக்கக் கோரியுள்ள இந்நிலையில், ஜியோவின் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஜியோவின் சில மணிநேர சிக்கல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜியோ, “எங்களது நெட்வொர்க்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.