ஸ்லிம் விண்கலம்
ஸ்லிம் விண்கலம் PT
டெக்

Wow! நிலவில் இரு இரவுகளை கழித்த ஸ்லிம் விண்கலம்; போட்டோ வந்ததும் ஜப்பான் விஞ்ஞானிகள் ஹேப்பி!

Jayashree A

விண்வெளியில் அடுத்த ஒரு சாதனையைப் படைத்துள்ளது ஜப்பான்.

நிலவின் தென் துருவப்பகுதியில் சந்திரயான் 3ஐ தரையிறக்கி சாதனைபுரிந்த ISROவை தொடர்ந்து, ஜப்பானும் நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஜப்பானின் விண்வெளி நிறுவனமான JAXA, 560 கிலோ எடைக்கொண்ட ஸ்லிம் விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்லிம் விண்கலம் (Smart Lander for Investigating Moon - SLIM) டிசம்பர் 25ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.

"மூன் ஸ்னைப்பர்" மூலம் ஜனவரி 19ம் தேதி ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இருப்பினும் சூரியனிலிருந்து மின்சாரத்தை பெற வேண்டிய மின் தகடுகள் தவறான கோணத்தில் திரும்பி இருந்ததால், விண்கலத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் தடை ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் அதில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரியின் உதவியினால் விண்கலம் வேலை செய்து வந்தது. அதிலிருந்த ரோவர் பேட்டரியின் உதவியால் புகைப்படத்தை எடுத்து அனுப்பி வந்தது.

அதனால் பேட்டரியின் சார்ஜ் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது. விஞ்ஞானிகள் ஸ்லிம் விண்கலத்தின் சோலார் தகடுகளை செயல்படவைப்பதற்கான முயற்சியில் இறங்கினர். அவர்கள் முயற்சி வீண் போகவில்லை. விஞ்ஞானிகளின் முயற்சியால் மின் தகடுகள் சூரியனின் பக்கம் திருப்பி வைக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யத்தொடங்கியது.

அதன் பிறகு நிலவில் பகல் பொழுதை கடந்த ஸ்லிம் விண்கலமானது 25ம் தேதி முதல் கடும் குளிரான இரவு பகுதியை எதிர்நோக்கியது. மின் தகடுகளின் மூலம் சூரியனிலிருந்து பெற்ற ஆற்றலைக்கொண்டு ஸ்லிம் விண்கலத்தின் உபகரணங்கள் மற்றும் அதன் பேட்டரிகள் சூடாக இருப்பதால் அது இரண்டு இரவையும் கடந்து வேலை செய்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நிலவின் இரவில் இரண்டாவது நாள் இரவை வெற்றிகரமாக கழித்த ஸ்லிம் விண்கலம், 28ம் தேதி நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பியதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (நிலவில் ஒரு இரவு என்பது பூமியின் 14 நாட்கள் ஆகும்)

”மைனஸ் 130 டிகிரி செல்சியஸ் (-200 டிகிரி பாரன்ஹீட்)க்குக் கீழே வெப்பநிலை வீழ்ச்சியடையும் போது, ​​விண்கலம் கடுமையான சந்திர இரவுகளுக்காக வடிவமைக்கப்படவில்லை” என்று JAXA கூறுகிறது. இருப்பினும் ஸ்லிம் விண்கலம் தொடர்ந்து இரவிலும் செயல்படுவது விஞ்ஞானிகளின் கொண்டாட்டத்திற்கு காரணமாகியுள்ளது.

அதன்படி, ஸ்லிம் என்னும் விண்கலத்தை அனுப்பியதன் மூலம் ஜப்பான் சாதனையை படைத்த நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.