டெக்

''டிக் டாக் செயலியை அளவோடு பயன்படுத்துங்கள்'' - உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

webteam

டிக் டாக் செயலியால் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை அளவோடு பயன்படுத்து நல்லது என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வீடியோ பதிவிடுவது பல்வேறு விபரீதங்களுக்கு வித்திட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி காவல்துறை வரை யாரையும் விட்டுவைக்கவில்லை டிக்டாக் மோகம். கணவன் மனைவி இடையே மண முறிவு, தற்கொலை, கொலை என டிக்டாக் வீடியோவால் ஏற்படும் குற்றசெயல்களின் பட்டியல் நீள்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக்டாக் வீடியோவால் அரங்கேறிய கொலை மற்றும் தற்கொலை சம்பவம் இதற்கு ஒரு சிறு உதாரணம். தாழவேட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் தனது நண்பர் விஜியுடன் இணைந்து குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி தவறாகப்பேசி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் விஜியை கொலை செய்துவிட்டதாகக்கூறி காவல்துறையினரிடம் வெங்கட்ராமன் சரணடைந்தார்.

அவர் மீதான வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் தனக்கு அதிக தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் வெங்கட்ராமனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விளையாட்டாக தொடங்கும் டிக்டாக் செயல். ஒருவித மன பாதிப்பு என்கிற அளவுக்கு அவர்களை தள்ளிவிடுவதாக  உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்

டிக் டாக் வீடியோவால் பலர் பிரபலமாவதும், வீடியோவை தொடர்ந்து வரும் லைக்ஸ், கமென்ட்ஸ் போன்றவையே ஒருவரை மீண்டும் மீண்டும் டிக்டாக்கில் மூழ்கசெய்வதாக கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு என்ற அளவில் டிக்டாக்கை நிறுத்திக்கொண்டால் டிக் டாக்கில் இருந்து குற்றங்கள் உருவாகாது எனவும் தெரிவிக்கின்றனர்.